அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் தொடங்கப்படாதது ஏன்? அன்புமணி


அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் தொடங்கப்படாதது ஏன்? அன்புமணி


தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கேஜி ஆகிய மழலையர் வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்படும் என்று அரசு அறிவித்து 19 நாட்கள் ஆகியும் இன்று வரை மாணவர் சேர்க்கை ஏன் தொடங்கப்படவில்லை எனப் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கத்துடன் 2381 அரசுப் பள்ளிகளில் 2019-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட எல்.கே.ஜி, யு.கே.ஜி ஆகிய மழலையர் வகுப்புகள் மூடப்படுவதாக ஜூன் மாதத் தொடக்கத்தில் தமிழக அரசு அறிவித்தது.

அதற்கு எதிர்ப்பு எழுந்த நிலையில், பின்பு அரசுப் பள்ளிகளிலேயே மழலையர் வகுப்புகள் நடத்தப்படும் என்றும், அதற்காக 2,500 சிறப்பாசிரியர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்தார்.

இந்நிலையில் கடந்த ஜூன் 13-ம் தேதி பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டன. ஆனால் இன்று வரை மழலையர் வகுப்புகள் தொடங்குவதற்கான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. எனவே இது குறித்து அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

2381 அரசுப் பள்ளிகளில் ஒன்றில் கூட எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளுக்கு இன்னும் மாணவர் சேர்க்கை தொடங்கப்படவில்லை. பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குக் கடந்த 13-ஆம் தேதி அரசுப் பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், அதன் பின்னர் இரு வாரங்களாகியும் மழலையர் வகுப்புகள் இன்னும் தொடங்கப்படவில்லை.

கடந்த இரு ஆண்டுகளாக மழலையர் வகுப்புகள் நடத்தப்படாத நிலையில் நடப்பாண்டில் மழலையர் வகுப்புகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்க்கப் பல்லாயிரக்கணக்கான பெற்றோர்கள் அரசுப் பள்ளிகளுக்குப் படையெடுக்கின்றனர். ஆனால், மழலையர் வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை குறித்து அவர்களுக்கு எந்த விளக்கமும் கிடைப்பதில்லை. மாறாக, ‘‘இரு வாரங்கள் கழித்து வாருங்கள்’’ என்ற பதில் மட்டுமே கிடைக்கிறது.

Must Read: 50,000 பள்ளி ஆசிரியர்களை உடனே நியமிக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

ஆங்கிலமயமாக்கப்பட்ட கல்விச் சூழலில் தங்கள் பிள்ளைகள் மழலையர் வகுப்புகளில் பயில வேண்டும் என்பது பெற்றோர்களின் கனவாக உள்ளது. ஆனால், அனைத்து பெற்றோர்களுக்கும் தங்களின் பிள்ளைகளைத் தனியார் ஆங்கிலப் பள்ளிகளில் படிக்க வைக்கும் அளவுக்கு வசதி இல்லை. அப்படிப் பட்ட பெற்றோர்களுக்கு அரசுப் பள்ளிகளில் நடத்தப்படும் மழலையர் வகுப்புகள் தான் வரப்பிரசாதமாக அமைந்திருந்தன.

தனியார்ப் பள்ளிகளில் மழலையர் வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை பல மாதங்களுக்கு முன்பே நிறைவடைந்து வகுப்புகளும் தொடங்கி விட்டன. ஆனால், அரசுப் பள்ளிகளில் மழலையர் வகுப்பு மாணவர் சேர்க்கை எப்போது தொடங்கும் என்பது கூட தெரியாததால் பெற்றோர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். தங்கள் குழந்தைகளின் கல்வி குறித்த கவலையில் அவர்கள் ஆழ்ந்துள்ளனர்.

அதேபோல், மழலையர் பள்ளிகளுக்கு ஆசிரியர்களை நியமிப்பதற்கான நடைமுறைகளும் இன்னும் தொடங்கப்படவில்லை. ஆசிரியர்கள் நியமிக்கப்பட்ட பிறகு தான் மழலையர் வகுப்புகளைத் தொடங்க வேண்டும் என்றால் அதற்கு இன்னும் சில மாதங்கள் ஆகலாம்.

அதுவரை மழலையர்களின் கல்வி உரிமை பறிக்கப்படக் கூடாது. ஏற்கனவே, மழலையர்களுக்கு வகுப்பெடுத்த ஆசிரியர்களைக் கொண்டு மழலையர் வகுப்புகளை நடத்துவதற்குத் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்ய வேண்டும்.

குழந்தைகளின் கற்றல் திறன் 3 வயதில் சிறப்பாக இருக்கும் என அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதனால் அந்தப் பருவத்தில் அவர்களுக்கு முறைசார்ந்த கல்வி வழங்குவது அவசியம் ஆகும்.

Also Read: சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்கிற்கு சென்னையில் சிலையுடன் மணி மண்டபம் அமைக்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

இதை உணர்ந்து அரசுப் பள்ளிகளில் செயல்பட்டு வரும் மழலையர் பள்ளிகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பைத் தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும். ஒரு வாரத்திற்குள் மாணவர் சேர்க்கையை நிறைவு செய்து, அடுத்த வாரம் முதல் வகுப்புகளைத் தொடங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog