நாமக்கல் மாவட்டத்தில் ‘மைக்ரோ பிட்’ பேப்பர் பறிமுதலால் 7 தேர்வு கண்காணிப்பாளர்கள் நீக்கம்: மாணவிகளை சோதனை செய்ய பெண் காவலர் நியமனம்
நாமக்கல் மாவட்டத்தில் ‘மைக்ரோ பிட்’ பேப்பர் பறிமுதலால் 7 தேர்வு கண்காணிப்பாளர்கள் நீக்கம்: மாணவிகளை சோதனை செய்ய பெண் காவலர் நியமனம்
நாமக்கல், மே 21: பொதுத்தேர்வு மையங்களில் மாணவர்களிடமிருந்து மைக்ரோ ஜெராக்ஸ் பிட் பேப்பர் பறிமுதல் எதிரொலியாக நாமக்கல்லில் தேர்வு கண்காணிப்பாளர்கள் 7 பேர் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் நடைபெற்ற பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தேர்வின்போது மாணவ, மாணவிகளிடமிருந்து மைக்ரோ ஜெராக்ஸ் பிட் பேப்பர்கள் கிலோ கணக்கில் பறிமுதல் செய்யப்பட்டது. குறிப்பாக கொல்லிமலை, குமாரபாளையம், பள்ளிபாளையத்தில் உள்ள அரசு தேர்வு மையங்களில் மாணவ, மாணவிகளிடமிருந்து அதிகளவில் மைக்ரோ ஜெராக்ஸ் பிட் பேப்பர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கொல்லிமலையில் மாணவர்களை விட மாணவிகள் அதிகளவில் பிட் பேப்பர்களை கொண்டு வந்தது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து கொல்லிமலையில் உள்ள அரசு பள்ளி தேர்வு மையத்தில் பணியாற்றி வந்த 7 அறை கண்காணிப்பாளர்கள் தேர்வு பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் தேர்வுகள் துவங்கும் முன்பு அனைத்து மையங்களிலும் மாணவ, மாணவிகளை முழுமையாக சோதித்த பிறகே தேர்வு எழுதும் அறைக்குள் அனுமதிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொல்லிமலையில் மாணவிகளை சோதனை செய்ய பெண் காவலரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார். நேற்று பிளஸ் 2 மாணவர்களுக்கு இயற்பியல் தேர்வு நடை பெற்றது. மாவட்டம் முழுவதும் அனைத்து மையங்களிலும் மாணவ, மாணவிகளை சோதித்த பிறகே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.
Comments
Post a Comment