மக்களே உஷார்..!! குப்பைகளை தரம் பிரிக்காமல் வழங்கினால் இனி ரூ.1,000 அபராதம்..!! 441993303


மக்களே உஷார்..!! குப்பைகளை தரம் பிரிக்காமல் வழங்கினால் இனி ரூ.1,000 அபராதம்..!!


குப்பை சேகரிக்கும் வாகனங்களில் தூய்மைப் பணியாளர்கள் வீடு தேடி வரும்போது மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று பிரித்து வழங்க வேண்டும் என அரசு தரப்பில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். நம்மை சுற்றி இருக்கும் பகுதியை நாம் தான் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்றும் குப்பை இல்லா மாநிலமாக மாற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சென்னையில் மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரிக்காமல் வழங்கினால் அபராதம் விதிக்கப்படும் என்று வீடுகள் தோறும் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் நோட்டீஸ் வழங்கி வருகிறார்கள். 

 

அதில், பொதுமக்கள் தங்கள் வீட்டில் உருவாகும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பையாக தரம் பிரித்து கொடுக்க உத்தரவிட்டதுள்ளது. அதன்படி உணவு, காய்கறி-பழம், இறைச்சி, தோட்டம் மற்றும் காய்ந்த மலர்கள், இலை கழிவுகள் ஆகியவை மக்கும் குப்பையாகவும், பிளாஸ்டிக் பைகள், தண்ணீர், கண்ணாடி, பிளாஸ்டிக், அட்டைகள், காகிதம், செய்தித்தாள்கள், தெர்மோகோல், தோல், இரும்பு, மரம், டயர், டியூப், ரப்பர் கழிவுகள் ஆகியவை மக்காத குப்பையாகவும்  வகை பிரித்து அவற்றை தினந்தோறும் வரும் மாநகராட்சி தூய்மை பணியாளரிடம் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும், தேவையற்ற வர்ண டப்பாக்கள், காலி பூச்சி கொல்லி மருந்து டப்பாக்கள், சி.எப்.எல்., குழல் மற்றும் இதர விளக்குகள், காலாவதியான மருந்துகள், உடைந்த பாதரச ஜீரமானிகள், பயன்படுத்தப்பட்ட பேட்டரிகள், பயன்படுத்தப்பட்ட ஊசிகள், ஊசி மருந்து குழல்கள் மற்றும் மாசடைந்த அளவை மானிகள் மற்றும் சுகாதார கெடுதல் கழிவுகள், எண்ணெய் கேன்கள், டின்கள், பசைகள், பேட்டரிகள், பல்புகள், கம்பிகள், பி.வி.சி பொம்மைகள் முதலானவை வாரம் ஒருமுறை தனியாக வழங்குமாறு மாநகராட்சி சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

 

அதன்படி, குப்பைகளை தரம் பிரித்து வழங்காவிடில் தனி நபர் இல்லங்களுக்கு ரூ.100, அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ரூ.1,000 அபராதம் வசூலிக்கப்படும். பெருமளவு குப்பை உருவாக்குவோருக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது. 

அபராதம் விதித்த பிறகும் விதிகளை மீறினால் 2 மடங்கு அபராதம் செலுத்த நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களால் பிரித்து கொடுக்கப்படும் மக்கும் குப்பையை பதப்படுத்தி, அதிலிருந்து இயற்கை உரம் மற்றும் இயற்கை எரிவாயு தயாரிக்கப்படுகிறது. மக்காத குப்பைகளை மறுசுழற்சி செய்யவும் மற்றும் பதப்படுத்தவும் அனுப்பப்படுகிறது.

 

Comments

Popular posts from this blog