25வது நாளை வெற்றிகரமாக எட்டிய கமலின் விக்ரம்.. சென்னையில் மட்டும் எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா?
25வது நாளை வெற்றிகரமாக எட்டிய கமலின் விக்ரம்.. சென்னையில் மட்டும் எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா?
நடிகர் கமல்ஹாசன், பகத் பாசில், விஜய் சேதுபதி, நரேன், சூர்யா, மைனா நந்தினி, மகேஷ்வரி, ஷிவானி, காயத்ரி உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்து கடந்த 3ம் தேதி திரையரங்குகளில் வெளியானது விக்ரம் படம். கமல் 4 ஆண்டுகளுக்கு பிறகு நடித்து வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் சர்வதேச அளவில் வெளியான இந்தப் படம் தொடர்ந்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து வருகிறது. திரையிடப்பட்ட அனைத்து இடங்களிலும் அரங்கு கொள்ளாத காட்சிகளாக ஓடி வருகிறது. வார இறுதி நாட்களில் மட்டுமின்றி வார நாட்களிலும் திரையரங்குகளில் அதிகமான கூட்டத்தை பார்க்க முடிகிறது.
படத்தில் ஒவ்வொரு கேரக்டரையும் சிறப்பாக பயன்படுத்தியுள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். குழந்தையாக நடித்துள்ள தர்ஷன் கதாபாத்திரமும் அனைவரும் ரசிக்கும் வகையில் அமைந்திருந்தது. கமலை போலவே தன்னுடைய கண்களாலேயே அனைவரையும் கவர்ந்திருந்தார் தர்ஷன். அவருக்கு குட்டி விக்ரம் என்ற பெயர் மிகவும் பொருத்தமாகவே அமைந்துள்ளது.
இந்தப் படம் 200 கோடி ரூபாய் வரையில் வசூலிக்கும் என்று முன்னதாக பாக்ஸ் ஆபீஸ் நிபுணர்கள் கணித்திருந்த நிலையில், அவர்களது கணிப்புகளை பொய்யாக்கி தற்போது 400 கோடி ரூபாய் வசூலை சர்வதேச பாக்ஸ் ஆபீசில் கலெக்ட் செய்துள்ளது படம். மேலும் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடி வருகிறது. இதனால் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு மாமனிதன், பட்டாம்பூச்சி, வேழம் உள்ளிட்ட படங்கள் ரிலீசான நிலையில், இந்தப் படங்களின் வெளியீட்டால் விக்ரம் படத்தின் கலெக்ஷன் குறையலாம் என்று கூறப்பட்டது. ஆனால், தற்போது வரை விக்ரம் படமே வசூலில் முன்னணியில் உள்ளது. இதன்மூலம் சர்வதேச அளவில் அதிகமான வசூலை பெற்ற ரஜினியின் 2.ஓ படத்தின் கலெக்ஷனை விரைவில் விக்ரம் முறியடிக்கும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் சென்னையில் மட்டுமே விக்ரம் படம் இதுவரை 16 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளது. 4 வாரங்களை தாண்டி சிறப்பாக ஓடிவரும் விக்ரம் படம் இந்த வசூலை மேலும் தாண்டும் என்று எதிர்பார்க்கலாம். இந்நிலையில் இன்றைய தினம் விக்ரம் படம் 25வது நாளை திரையரங்குகளில் வெற்றிகரமாக எட்டியுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பே இந்தப் படத்தின் 25வது நாள் கொண்டாட்ட போஸ்டர் வெளியான நிலையில், இன்றைய தினம்தான் 25வது நாளை திரையரங்குகளில் விக்ரம் எட்டியுள்ளது. படம் வெளியாகி 4 வாரங்களாகியும் இன்னும் 300க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ஓடி வருகிறது.
Comments
Post a Comment