துரோகத்தின் அடையாளம் ஓபிஎஸ் - ஜெயக்குமார் குற்றச்சாட்டு!


துரோகத்தின் அடையாளம் ஓபிஎஸ் - ஜெயக்குமார் குற்றச்சாட்டு!


அதிமுகவில் நிலவும் பரபரப்பான சூழலுக்கு மத்தியில், ‘அதிமுக தலைமை நிலைய செயலாளர் தலைமை கழகம்’ சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில், தலைமை கழக நிர்வாகிகளின் வேண்டுகோளுக்கிணங்க இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று கூறப்பட்டிருந்தது.

அதன்படி, அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமி, ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆனால், ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களாக உள்ள தலைமைக் கழக நிர்வாகிகள் கலந்து கொள்ளவில்லை.

முன்னதாக, அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் செல்லாது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார். ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் இல்லாமல் நடைபெறும் கூட்டம் கட்சி விதிகளுக்கு புறம்பானது எனவும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் தாம் எந்த ஒப்புதலும் அளிக்கவில்லை; கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் கட்சியையும், தொண்டர்களையும் கட்டுப்படுத்தாது எனவும் ஓபிஎஸ் தெரிவித்திருந்த நிலையில், அவரும் அவரது ஆதரவாளர்களும் கலந்து கொள்ளவில்லை.

இந்த நிலையில், அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “நிர்வாகிகள் கேட்டுக் கொண்டதற்கிணங்க தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர்கள் இல்லாத சூழலில் தலைமை கழக நிர்வாகிகளுக்கு கூட்டம் நடத்த அதிகாரம் உள்ளது. ஓபிஎஸ்சுக்கு அடிப்படை விதிகளே தெரியவில்லை என்றால் என்ன செய்வது.” என்றார்.

அதிமுக பொருளாளர் பதவியில் இருந்து ஓபிஎஸ் நீக்கம்?
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க அழைப்பிதழ் அனுப்புவது என்பன உள்ளிட்ட பல முடிவுகள் கூட்டத்தில் எடுக்கப்பட்டதாக தெரிவித்த ஜெயக்குமார், 74 தலைமை கழக நிர்வாகிகளில் 65 பேர் கலந்து கொண்டனர். உடல்நலக் குறைவு உள்ளிட்ட காரணங்களால் 5 பேர் மட்டுமே கலந்து கொள்ளவில்லை என்றார். எஞ்சியவர்களான ஓபிஎஸ், வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன், மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட 4 பேர் கூட்டத்துக்கு வரவில்லை.

அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டத்தில் பொருளாளர் பதவியில் இருந்து ஓபிஎஸ்சை நீக்க முடிவெடுக்கப்படவுள்ளதாக வெளியான தகவல் குறித்த கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார், அதிமுகவுக்கு பல துரோகங்களை ஓபிஎஸ் செய்துள்ளார். துரோகத்தின் அடையாளம் ஓபிஎஸ். பொருளாளர் பதவியில் அவர் தொடர்வாரா என்பது பற்றி பொதுக்குழுவில் முடிவெடுக்கப்படும் என்றார்.

மேலும், அதிமுகவின் ஒற்றைத் தலைமை ஆக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பம். ஜூலை 11ஆம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழுக் கூட்டத்தில் நிச்சயம் நல்ல முடிவு எடுக்கப்படும் என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார்.

முன்னதாக, கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போதே அதிமுக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பேனர்களில் ஓபிஎஸ் புகைப்படத்தை கிழித்து எறிந்தனர். அவ்வாறு கிழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

Cheeseburger Sliders Easy 30

Vestido de festa vinho longos para formaturas e casamentos