தொடரும் சோகம்- நீட் தேர்வுக்கு பயந்து பிளஸ் 2 மாணவி தற்கொலை!353876084


தொடரும் சோகம்- நீட் தேர்வுக்கு பயந்து பிளஸ் 2 மாணவி தற்கொலை!


அரியலூர்:

மருத்துவக் கல்வி பயில மத்திய அரசு கொண்டு வந்த நீட் நுழைவுத் தேர்வுக்கு பயந்து மாணவ-மாணவிகள் உயிரை மாய்த்துக் கொள்வது தொடர் கதையாகி விட்டது. அரியலூர் மாவட்டம் செந்துறையில் அனிதா என்ற மாணவி நீட் தேர்வுக்கு பயந்து தற்கொலை செய்தார். அவரின் தற்கொலை அரசியல் ரீதியாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நாளை நடைபெறவிருக்கும் நீட் தேர்வுக்கு பயந்து அரியலூரில் மீண்டும் ஒரு மாணவி நேற்று நள்ளிரவு தற்கொலை செய்தார்.

அரியலூர் ரெயில் நிலையம் அருகே வசித்து வருபவர் நடராஜன். இவர் கடந்த 10 ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி உமா. இந்த தம்பதியருக்கு நிஷாந்தினி (வயது 18) என்ற மகளும், நிவாஸ் (16) என்ற மகனும் உள்ளனர்.

இதில் நிஷாந்தினி அருகிலுள்ள ஒரு தனியார் பெண்கள் மெட்ரிக் பள்ளியில் படித்து பிளஸ்-2 தேர்ச்சி பெற்றார். பொதுத்தேர்வில் 600 க்கு 539 மதிப்பெண்கள் பெற்றார்.

சின்ன வயதில் இருந்தே டாக்டர் ஆக வேண்டும் என்ற கனவில் மிதந்தார். இதை அடுத்து கடந்த 2 மாதமாக திருச்சியில் உள்ள ஒரு தனியார் நீட் பயிற்சி மையத்தில் ஆன்லைன் வகுப்பில் சேர்ந்து படித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு நிஷாந்தினி திடீரென வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இரவு வெகு நேரமாக தனி அறையில் உட்கார்ந்து படித்துக் கொண்டு இருந்தார். அப்போது அவரது தாயார் உமா மகளிடம் சாப்பிட்டுவிட்டு படுத்து தூங்கு. நாளை படித்துக் கொள்ளலாம் என கூறினார். அதற்கு நிஷாந்தினி தாயாரிடம் எப்படியாவது நீட் தேர்வில் வெற்றி பெற்று டாக்டர் ஆக வேண்டும். நீங்கள் போய் படுத்து தூங்குங்கள். நான் சற்று நேரம் கூட படித்து விட்டு தூங்குகிறேன் என கூறியிருக்கிறார்.

இதை அடுத்து தாயாரும் அவரது சகோதரரும் பக்கத்து அறைக்கு தூங்குவதற்கு சென்றுவிட்டனர். பின்னர் இன்று அதிகாலை 4 மணி அளவில் உமா எழுந்து பார்த்தபோது நிஷாந்தினி படித்துக் கொண்டிருந்த அறையில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. மின்விசிறி ஓடிக்கொண்டிருந்தது.

பின்னர் சமையலறையில் சென்று பார்த்தபோது அங்கு நிஷாந்தினி தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருப்பதை பார்த்து அலறி துடித்தார். தாயும், தம்பியும் தூங்கியவுடன் நிஷாந்தினி தூக்கு போட்டு தற்கொலை செய்திருக்கலாம் என தெரியவந்தது.

இது பற்றி தகவல் அறிந்த அரியலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் கோபி, சப்-இன்ஸ்பெக்டர் பாலாஜி ஆகியோர் சம்பவ இடம் விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் இறந்த மாணவியின் உடலை மீட்டு அரியலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் போலீசார் நிஷாந்தினி அறையை சோதனை செய்தனர். அப்போது ஒரு கடிதம் கைப்பற்றப்பட்டது. அதில் சின்ன வயதில் இருந்தே டாக்டருக்கு படிக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். அதற்காக தீவிர பயிற்சியும் எடுத்தேன். ஒரு வேளை தேர்வில் தோற்றுவிட்டால் கனவு பொய்த்து விடும் என்ற பயத்தில் இந்த முடிவை எடுக்கிறேன் என எழுதப்பட்டிருந்தது. கடிதம் எழுதி வைத்துவிட்டு நிஷாந்தினி சமையலறையில் போய் தூக்கு போட்டு உள்ளார் என்பது தெரியவருகிறது.

இது பற்றி அவரது தாயார் உமா கூறும்போது, நன்றாக படிப்பாள். ஏன் இந்த முடிவை எடுத்தாள் என தெரியவில்லை. இயல்பாக நீட் தேர்வுக்கு ஆயத்தமாகி வந்தார். ஹால் டிக்கெட் வாங்கி வந்தார். ஆனால் நேற்று தேர்வு பயத்தில் ஒருவித மன இறுக்கத்துக்கு ஆளாகி இருந்ததை யூகிக்க முடிந்தது. ஆகவே தான் நானும் இரவு வெகு நேரம் படித்துக்கொண்டிருந்த அவளிடம் படுத்து தூங்கு என்று கூறினேன். அவள் தூங்கி விடுவாள் என நினைத்தேன். ஆனால் நிரந்தரமாக தூங்கி விட்டாள் என கண்ணீர் மல்க கூறினார். நீட் தேர்வுக்கு பயந்து அரியலூரில் மீண்டும் ஒரு மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments

Popular posts from this blog